தனியார் பேருந்துக்கு இணையாக தமிழக அரசு இந்த மாதம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்கத்தின் சார்பில் 134.53 கோடி ரூபாய் மதிப்பில் 515 புதிய நவீன பேருந்துகளை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
கழிப்பறை வசதி, குளிர் சாதன வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட இதுவரை அரசு பேருந்துகளில் இல்லாத அம்சங்களுடன் புதிய பேருந்துகள் தமிழகத்தில் வலம் வருகின்றது.
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல குளிர் சாதனம் மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணிக்க 975 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படுக்கை மற்றும் குளிர் சாதன வசதி கொண்டு பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் எனவும் , படுக்கை வசதி மட்டும் கொண்ட பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 1.55 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் குறிப்பிடதக்க அம்சம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஓட்டுநர் கண் அசந்து விடுவதால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதை தடுக்க ”சிலீப்பிங் சென்சார்” ஓட்டுநரின் இருக்கை அருகே பொருத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் தூங்குவதற்கு கண்ணை முடினால் அவரின் எதிரே உள்ள சென்சார், தானாக ஒ-லி எழுப்பி அவரை சுதாரிக்கச் செய்யும். பல்வேறு தனியார் பேருந்துகளில் கூட இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
மேலும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மற்றுமொரு பாதுகாப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து செல்லும் போது பேருந்திற்கு முன்னால் செல்லும் வாகனம் பேருந்திற்கு நெருக்கமாக வரும் பட்சத்தில் தானாக பேருந்து ப்ரேக் அடித்து தன்ன தானே நிறுத்திக் கொள்ளும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்தில் இடம் பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு அம்சங்கள் பாதுகாப்பான பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இது அல்லாமல், அடுத்து வரும் பஸ் நிறுத்ததை முன் கூட்டியே அறிந்து கொள்வது பேருந்தில் குடிநீர் இலவசமாக விநியோகம் செய்வது உள்ளிட்ட அம்சங்களும் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பேருந்தில் இடம் பெற்றுள்ளது.
நவீன வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்தாலும் ஏழை மக்களும் பயன் பெரும் வகையில் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டால் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வசதிகளை அவர்களும் சுவைத்து பார்க்க முடியும் என்பது சில பயணிகளின் கருத்தாக உள்ளது.
மேலும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு பல்வேறு புதிய வகதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேருந்துகளை சரியான முறையில் பராமரித்து கடைசி வரை அதன் தரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இல்லை எனில் பழைய படி சமூக வலைதளங்களில் மீம்ஸ்களுக்கு பஞ்சமில்லாமல் போய் விடும்.
