தமிழகத்தில் முதல் முறையாக அடுக்குமாடி வசதி கொண்ட பேருந்து நிலையம் மாதவரத்தில் இந்த மாதம் திறக்கப்பட்டுள்ளது. 95 கோடி ரூபாய் செலவில் கடந்த 2016 ஆண்டு மாதவரம் ரவுண்டானா அருகே சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்ட இந்த பணிகள் இந்த மாதம் நிறைவடைந்தது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் இந்த புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை இந்த மாதம் திறந்து வைத்தார். பேருந்தில் வெளி ஊர்களுக்கு பயணிக்கும் அனைவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தையே நாட வேண்டும். இதனால் பல நேரங்களில் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல்கள் ஏற்படும். இரவு நேரங்களில் வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பேருந்த நிலையத்தை விட்டு வெளியே வரும் போது கோயம்பேடு சாலையிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை சரி செய்யும் பொருட்டு கடந்த 2011 ஆண்டு மறைந்த ஜெயலலி-தா அவர்கள் மாதவரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அன்றைக்கு அவர் அறிவித்த அந்த பேருந்து நிலையத்தின் பணிகள் கடந்த 2016 ஆண்டு துவங்கப்பட்டு இந்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு பல்வேறு நவீன வசிதிகளை இந்த பேருந்து நிலையம் பெற்றுள்ளது. பேருந்துகள் நிறுத்த அடுக்குமாடி தளம், குற்றச் செயல்களை கண்காணிக்க சுழல் சிசிடிவி கேமராக்கள், மாற்று திறனாளிகளுக்கான பேட்டரி கார் உள்ளிட்ட வசதிகள் இந்த பேருந்து நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.
மேலும் 1700 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு பைக் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் தனி தனியே இங்கு இடம் பெற்றுள்ளது. பேருந்து நிலையம், அடித் தளம் தரை தளம் மேல் தளம் என 3 அடுக்கு உள்கட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளது. தரை தளம் மற்றும் மேல் தளத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும். மேல் தளத்திற்கு பேருந்துகள் செல்ல பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் மேலும் 155 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 471 புதிய பேருந்துகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து துவங்கி வைத்தார். முதற்கட்டாக 7 பேருந்துகளை முதலமைச்சர் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
பல்வேறு வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இன்னும் சரியான முறையில் அந்த வசிதிகள் பராமரிக்கப்படுவதில்லை என சில பயணிகள் புகார் கூறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், டிக்கட் கவுண்டர்கள் சரியான முறையில் செயல்படாமல் இருப்பதாகவும் சில பயணிகள் கூறுகின்றனர். இந்த குறைகள் கண்காணிக்கப்பட்டு சரி செய்யப்படும் பட்சத்தில் புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோத துவங்கி விடும்.
