Home செய்திகள் (News Articles) ஊன்றுகோல் வைத்து நடக்கும் வயதில் எழுதுகோல் ஏந்தும் கேரள பாட்டி

ஊன்றுகோல் வைத்து நடக்கும் வயதில் எழுதுகோல் ஏந்தும் கேரள பாட்டி

படிப்பிற்கு வயது தடையில்லை என்பது நாம் கேள்விபட்டிருப்போம் அதை நிஜமாக செய்து காட்டியுள்ளார் கேரளாவை சேர்ந்த கார்த்தியாயினி அம்மா.

இவருக்கு வயது 96 நடக்கின்றது. கேரள அரசின் 100 சதவிகித கல்வி கற்கும் திட்டத்தின் கீழ் கார்த்தியாயினி அம்மா படித்து வருகின்றார். முதற் கட்ட படிப்பை முடித்து 4 ஆம் வகுப்பிற்கு முன்னேரியுள்ளார் 96 வயது கார்த்தியாயினி அம்மா.

கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டம் செப்பட் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் கார்த்தியாயினி அம்மா.

100 சதவிகித கல்வி கற்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நாங்கள் கார்த்தியாயினி அம்மா வை கண்டறிந்தோம் என்கின்றார் உல்லாஸ் குமார் என்ற கிராம பஞ்சாயத் அதிகாரி.

”100 சதவிகித கல்வி கற்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க நாங்கள் லக்சம் வீடு காலனி பகுதிக்கு சென்றோம், எங்களை பார்த்து எல்லோரும் மறைந்து கொண்டனர்.

ஆனால் கார்த்தியாயினி அம்மா தானாக முன் வந்து தன்னை இந்த திட்டத்தில் இணைத்து கொண்டு படித்தார்.

அவரது வயது காரணமாக அவரது வீட்டிலேயே அவருக்கு பாடம் எடுக்கப்பட்டது.

அவர் தற்போது தாய் மொழி மற்றும் கணிதம் உள்ளிட்டவைகளை கற்றுக் கொண்டுள்ளார். வயது முதிர்ச்சியின் காரணமாக சிறிது மறதி இருந்தாலும் பாடகங்களை நன்றாக உள் வாங்கிக் கொள்கின்றார்.

தனது 60 வயதான மகள் இதே போன்று தினமும் காலையில் பையை மாட்டிக் கொண்டு படிக்க சென்றதை பார்த்த கார்த்தியாயினி அம்மா விற்கும் தானும் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

இது தான் அவரை இந்த வயதில் படிக்க தூண்டியுள்ளது, தற்போது இந்த மாநிலத்திலேயே 4 ஆம் வகுப்பு படிக்கப் போகும் வயதான பெண்மணி என்ற பெருமையை கார்த்தியாயினி அம்மா பெற்றுள்ளார்.

அவரது சேர்க்கை குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்ப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களில் அது செய்தியாகி தற்போது அவர் சுப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்” என அந்த பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனது தந்தையும் ஒரு கல்வியாளர், நான் சிறுவயதில் இருக்கும் போது 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு எனது தந்தை எழுத படிக்க கற்று தந்துள்ளார், நான் உயிரோடும் இருக்கும் பட்சத்தில் 10 ஆம் வகுப்பு வரை எனது மகளை போன்று படிப்பேன்” என கார்த்தியாயினி அம்மா கூறியுள்ளார்.

வயதாகிவிட்டால் எல்லாம் செயல் இழந்து விடும், எதையும் கற்றுக் கொள்ள இயலாது என்பார்கள் அதை பொய்யாக்கி காட்டியுள்ளார் கார்த்தியாயினி அம்மா. நம்பிக்கையும் உறுதியும் இருந்தால் எந்த வயதிலும் எதையும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு கார்த்தியாயினி அம்மா ஓர் எடுத்துகாட்டு.